உலர் மீன்களுக்குள் மறைத்து 8 இலட்சம் புற்றுநோய் மருந்துகள் கடத்தல்!

புற்றுநோய் மற்றும் நரம்பு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சுமார் 08 இலட்சத்திற்கும் அதிகமான மருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நாத்தாண்டிய – கெட்டாரமுல்ல பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் இந்த மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புற்றுநோய் மற்றும் நரம்பு நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட 863,680 மருந்துகள் 12 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சிறிய ரக லொறி ஒன்றின் மூலம் கடத்தப்பட்டுள்ளன.

குறித்த லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக,  கெட்டாரமுல்ல பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போதே பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலர்மீன்களை ஏற்றிச் செல்வது போல குறித்த லொறிக்குள், மருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்துத் தொகுதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது லொறியைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.