எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவைக் கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. இதனால் அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்த சில நடவடிக்கைகளை கைவிட யோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் தற்போது ஒரே தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு தற்செயலானது. நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னரே சாத்தியமானது. வரவிருக்கும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியாகப் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாத ஒரு தூய்மையான அரசியல் கட்சியாகும். கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எவ்வித ஊழல் கறைகளும் இல்லை. மாறாக, தற்போதைய அரசாங்கத்திற்குள் நிலக்கரி, வங்கிகள் மற்றும் கொள்கலன்கள் சார்ந்த பல்வேறு ஊழல்கள் நிலவுகின்றன. அந்த ஊழல்வாதிகளைக் காப்பாற்றவே அரசாங்கம் தற்போது முயன்று வருகிறது.
அரசாங்கத்துக்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுவதை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்துக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மூலம் மாகாண சபைத் தேர்தலைத் காலவரையறையின்றி பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது. அந்தத் தெரிவுக்குழுவைப் புறக்கணிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
கூட்டணியின் தலைமைத்துவம் என்பது எங்களுக்குள் ஒரு பிரச்சினையே அல்ல. சரியான நேரத்தில் அது சுமுகமாகத் தீர்க்கப்படும். அத்துடன், இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் சுமூகமான சூழலிலும், சிறந்த விருந்தோம்பலுடனும் அமைந்திருந்தது என்றார்.





