சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பொதுப் போக்குவரத்து சேவைகளையும், குறிப்பாக புகையிரத சேவையையும் உடனடியாக வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் புகையிரத திணைக்களத்திற்கு விசேட கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளதுடன், விநியோகப் பாதைகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கும் என்பதால் மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை நாட வேண்டிய நிலை ஏற்படக் கூடும்.
ஆகையால் இந்த சவால்களை எதிர்கொள்ள அலுவலக புகையிரதங்களில் மேலதிக பெட்டிகளை இணைத்து, ஒற்றைத் தொகுதியாக இயங்கும் புகையிரதங்களை இரட்டைத் தொகுதிகளாக இயக்குவதன் மூலமும் பயணிகளின் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். மீரிகம, பாதுக்கை, பாணந்துறை, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு போன்ற புறநகர்ப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மேலதிக புகையிரத சேவைகளை முன்னெடுப்பதோடு பயணிகளை ஈர்க்கும் வகையில் குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் கூடிய அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்து தொடர்பிலும் அவதான செலுத்தப்பட வேண்டும்.
அத்தோடு பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களை புகையிரத நிலையங்களில் நிறுத்திவிட்டு புகையிரதத்தில் பயணத்தைத் தொடரக்கூடிய வகையில் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்துவதுடன், பழுதடைந்துள்ள எஞ்சின்கள் மற்றும் பெட்டிகளை உடனடியாகப் புனரமைத்து சேவையில் ஈடுபடுத்த, அவற்றுக்கான உதிரிப்பாகங்கள் மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கொழும்பு போன்ற நகர்ப்புறங்களுக்குள் தனியார் வாகனங்கள் நுழைவதைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பது அவசியம் என அச்சங்க்ம் வலியுறுத்தியுள்ளது.





