ஏகாதிபத்தியத்துக்கு அடிபணியும் அரசாங்கத்திற்கு எதிராக உழைக்கும் மக்களின் அதிகாரத்தைத் திரட்டுவோம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னிலை சோசலிசக் கட்சி கொழும்பில் மாபெரும் பேரணியையும் மக்கள் சந்திப்பையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ‘ஏகாதிபத்தியத்துக்கு அடிபணியும் அரசாங்கத்திற்கு எதிராக உழைக்கும் மக்களின் அதிகாரத்தைத் திரட்டுவோம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை மே தினப் பேரணிகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாhளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் அமைப்பாளர் செயலாளர் சேனாதீர குணதிலக்க, வெகுஜன செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் மத்திய குழு உறுப்பினர் ஹேமி அபேரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில், இம்முறை கொழும்பில் மாலிகாகந்தை வொய்ட் மைதானத்திலிருந்து ஆரம்பமாகி ஹைட்பார்க் மைதானம் வரை எமது மே தினப் பேரணி நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறவுள்ள பிரதான கூட்டத்தில் எமது கட்சியின் கொள்கைகளை முன்வைக்கவுள்ளோம். குறிப்பாக ஏகாதிபத்தியத்தினால் உலகிற்கு ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு எதிரான ஒரு சக்தியை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும்.

இந்த மே தினப் பேரணியில் எமது கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், மீனவர் சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள் எனப் பல தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர். மேலும் இதில் கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. குறிப்பாக 48-க்கும் மேற்பட்ட தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு, புதிய ஒற்றைத் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முனைகின்றது. இதன் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் மற்றும் கூட்டுப் பேரப் பேச்சுவார்த்தை உரிமைகள் பறிக்கப்படவுள்ளன.

இவ்வாறான நிலையில், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் இந்த மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராகப் போதிய அழுத்தங்களைக் கொடுக்கத் தவறிவிட்டன. எனவே, ஏகாதிபத்தியத்திற்கும் இந்த மக்கள் விரோத அரசாங்கத்திற்கும் எதிராகத் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு பாரிய மக்கள் சக்தியைக் கட்டியெடுக்க வேண்டும்.

மே தினத்தை வெறும் களியாட்டமாக மாற்றும் அரசியல் கட்சிகளின் போக்கைத் தவிர்த்து, உழைக்கும் மக்களின் உண்மையான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியின் மே தினப் பேரணியில் அனைவரையும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.