அரச திணைக்களங்களில் பல ஆண்டுகளாகத் தற்காலிக அமைய நாளாந்த, பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் பணியாற்றும் ஊழியர்களை அரச சேவைக்கு நிரந்தரமாக உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை இரு வார காலத்தினுள் துரிதமாக நிறைவு செய்ய வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாணத் திணைக்களத் தலைவர்களுடனான விசேட முகாமைத்துவக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (08.05.2026) யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்களில் தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுத் தொடர்ச்சியாக 180 நாட்களைப் பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதில் நீண்டகாலமாகப் பல சிக்கல்கள் நிலவி வந்தன. அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 25/2014 மற்றும் 29/2019 ஆகியவற்றின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதில் காணப்பட்ட இத் தடைகளை நீக்கி இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாகவே தற்போது அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 11/2026 வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சுற்றறிக்கையின் மூலம் நிரந்தர நியமனங்கள் வழங்குவதில் இதுவரை காலமும் காணப்பட்ட நிர்வாகத் தடைகள் முற்றாக நீங்குவதுடன் ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.




