கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயத் தகனக்கொள்கை தொடர்பில் சுயாதீனமானதும், நம்பகமானதுமான விசாரணைகளை நடாத்தி, பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும், இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் 21 முஸ்லிம் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு முற்றிலும் விரோதமாக கொவிட் – 19 பெருந்தொற்றினால் மரணித்தோரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 31) ஆறு ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அக்கொள்கை அமுலாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதுடன் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கான ஒரு கூட்டுப்பிரகடனத்தை வெளியிடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31) தெளிவளை, களுபோவில ஜும்ஆ பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையை அடுத்து நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தேசிய ஷுரா கவுன்சில், இலங்கை முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் மீடியா ஃபோரம், கட்டாயத் தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கம், சமூக நீதிக்கான சட்டத்தரணிகள், இஸ்லாமிய கற்கைகள் நிலையம் என்பன உள்ளடங்கலாக 21 முஸ்லிம் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், அவ்வமைப்புக்களின் சார்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸினால் ‘இலங்கையில் பலவந்த தகனத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் 6 ஆம் ஆண்டு ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு 21 சிவில் அமைப்புக்கள் நீதி கோருகின்றன’ எனும் தலைப்பிலான கூட்டுப்பிரகடனம் வாசிக்கப்பட்டது. அப்பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:S
இலங்கையில் கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலப்பகுதியில் பலவந்த தகனத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும், அவ்வேளையில் நிகழ்ந்த மிகப்பாரதூரமான அநீதியையும் நாம் ஆழ்ந்த துயரத்துடன் நினைவுகூருகிறோம். அச்சந்தர்ப்பத்தில் கண்ணியமாக அடக்கம் செய்யப்படுவதற்கான பலரது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டது. அதன்விளைவாகப் பல குடும்பங்கள் அனுபவித்த வேதனையைப் பகிர்ந்துகொள்ளும் அதேவேளை, இவ்வாறான அநீதி மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
இந்த நினைவு நாள் கடந்த காலத்தை நினைவுகூருவதற்கு மாத்திரமானது அல்ல. மாறாக இது நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்குமான மனசாட்சியின் குரலாகும். இது நெருக்கடியான சூழ்நிலைகளின்போதும், அதன் பின்னரும் காருண்யம், ஒருமைப்பாடு மற்றும் பல்லினத்தன்மை என்பவற்றுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
கொவிட் – 19 பெருந்தொற்று தொடர்பான சர்வதேச வழிகாட்டல்கள் அடக்கம் செய்யப்படுவதை அனுமதித்திருந்த போதிலும், இந்தக் கட்டாயத் தகனக்கொள்கை அமுல்படுத்தப்பட்டமையினால் பெருந்துயரம் ஏற்பட்டது. குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தில் உடல்களை எரிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டிருப்பதனால், இக்கொள்கை முஸ்லிம் சமூகத்துக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெளிவான வழிகாட்டல்களையும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் வேண்டுகோள்களையும் மீறி இக்கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மத்தியில் வேதனை மேலும் தீவிரமடைந்தது. இதனூடாக மதசுதந்திரம் மீறப்பட்டதுடன் மாத்திரமன்றி, நாடளாவிய ரீதியில் சமூகப்பிளவுகளும் அதிகரித்தன.
இந்தக் கொள்கை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மீளப்பெறப்பட்டதுடன், 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பகிரங்க மன்னிப்புக் கோரப்பட்டது. இருப்பினும் தமது அன்புக்குரியவர்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்யமுடியாமல், மண்ணறைகளைப் பார்வையிட முடியாமல் குடும்பங்கள் அனுபவித்த துயரம் இன்னமும் தொடர்கிறது. அக்குடும்பங்கள் இந்த வேதனையிலிருந்து மீள்வதற்கு நீதியும், பொருத்தமான இழப்பீடும் அவசியமாகிறது.
இந்நிலையில் கட்டாயத் தகனக்கொள்கையின் அமுலாக்கம் தொடர்பில் சுயாதீனமானதும், நம்பகமானதுமான விசாரணைகளை நடாத்தி, பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தல், மார்ச் மாதம் 31 ஆம் திகதியை தேசிய நினைவு நாளாக அறிவித்தல், அனைத்து சமூகங்களும் அணுகக்கூடிய வகையில் பாதிக்கப்பட்டோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை நிறுவுதல் ஆகிய 4 பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோருகிறோம் என அப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





