கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் விபத்தில் பலி! தீவிர சிகிச்சையில் இருவர்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காத்தான்குடியில் மட்டக்களப்பு நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நாவற்குடா பகுதியில் நேற்று புதன்கிழமை (1) இரவு ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இருந்து சம்பவ தினமான நேற்று இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பை நோக்கி உயிரிழந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்துள்ளார்.

 

இதன்போது முன்னால் சென்ற மோட்டர் சைக்கிளின் புகைபோக்கியில் தட்டுப்பட்டதையடுத்து மோதி விபத்துக்கு உள்ளானதில் 22 வயது இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையல் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வந்தவர் என்பதுடன் விடுமுறைக்காகத் தாய்நாடு வந்திருந்தவர் எனவும் தனது விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் நாளை மறுதினம் கட்டார் செல்ல இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.