கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பாரிய நெருக்கடி ; கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள  விலைவாசி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக கட்டுமானப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய நெருக்கடி உருவாகியுள்ளதாகக் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (24)  நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களாகக் கடும் வீழ்ச்சியைக் கண்டிருந்த கட்டுமானத்துறை, தற்போதே ஓரளவு மீண்டெழ ஆரம்பித்திருந்தது. எனினும் எரிபொருள் விலை உயர்வு இத்துறையை மீண்டும் ஒரு ‘மரணப் பொறிக்குள்’ தள்ளியுள்ளது. ஒரு மூடை சீமெந்தின் விலை 200 ரூபாவினாலும், இரும்பு கம்பிகளின் விலை சுமார் 100 ரூபாவினாலும் அதிகரித்துள்ளன.  எரிபொருள் விலை அதிகரிப்பால் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், ஒரு லோடு மணலின் விலை சுமார் 13 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.

பிளைவுட் போர்டு முதல் ஒட்டும் பசைகள்  வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் 15 சதவீதமுதல் முதல் 20 சதவீதமாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு சாதாரண மக்களையும் ஒப்பந்தக்காரர்களையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வங்கியில் கடன் உதவிகளைப் பெற்று வீடுகளைக் கட்ட ஆரம்பித்தவர்கள் தற்போது அந்தப் பணத்தைக் கொண்டு பணிகளை நிறைவுசெய்க்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கைமைய  பழைய விலையில் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பது ஒப்பந்தக்காரர்களால் சாத்தியமற்ற விடயமாகியுள்ளது. அத்துடன்  இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான டீசல் செலவுகளும் அதிகரித்துள்ளமையால் கட்டுமானங்களின் தரத்திலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கொங்கிறீட் இடும்போது பயன்படுத்தப்படும் அதிர்வு இயந்திரங்களுக்கான செலவு அதிகரிப்பால், வேலையாட்கள் பழைய முறைகளைக் கையாளக்கூடும்.

இது கட்டிடங்களின் உறுதித்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும்.  கட்டுமானத்துறையை நம்பி சுமார் 31 இலட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இத்துறைக்கு முறையான ஒழுங்குபடுத்தல் அல்லது நியாமான விலைக் கட்டுப்பாடு இல்லை எனில், மீண்டும் ஒருமுறை இத்துறை முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.