கணக்காய்வாளர் அலுவலகத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் நியமனத்தை மேற்கொள்ளுங்கள்!

அரச இயங்குகை மற்றும் பொதுநிதியின் உரியவாறான முகாமைத்துவம் என்பவற்றுக்குப் பொறுப்பாக விளங்கும் தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் கௌவரத்தையும், சுயாதீனத்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் அதற்குரிய நியமனத்தை மேற்கொள்ளுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியிடமும், அரசியலமைப்புப் பேரவையிடமும் வலியுறுத்தியுள்ளது.

கணக்காய்வாளர் நியமனம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அரச நிதி மற்றும் பொதுவளங்களை முகாமை செய்வதற்கான முக்கிய பொறுப்பைக் கொண்டிருப்பதுடன் நிறைவேற்றதிகாரத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதை உறுதிப்படுத்தவேண்டிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குக் கடந்த 8 மாதங்களாகப் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படாமல் வெற்றிடம் நிலவுவது குறித்து நாம் மிகுந்த கரிசனையடைகின்றோம்.

இந்நிலையில் அரசியலமைப்பு வழிகாட்டல்களின் பிரகாரம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக கணக்காய்வு செயன்முறையின் சுயாதீனத்துவத்தைப் பேணக்கூடிய பொருத்தமான தகுதிவாய்ந்த ஒருவரை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு அரசியலமைப்புப்பேரவை பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று இந்தக் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கென கடந்த காலங்களில் ஜனாதிபதியினாலும், அரசாங்கத்தினாலும் இடைக்கால மற்றும் நிரந்தர நியமனங்களுக்குரிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அந்நபர்களின் பின்னணி மற்றும் அவர்களைப் பற்றிய மக்கள் அபிப்பிராயம் என்பவற்றையும் கருத்திற்கொண்டு செயற்படுமாறு அரசியலமைப்புப்பேரவையிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான பரிந்துரைகளை முன்வைக்கையில், அதற்குரிய தகுதி மற்றும் தெரிவுச்செயன்முறை குறித்த வழிகாட்டல்கள் முழுமையாகப் பின்பற்றப்படவேண்டும். ஆகவே அரச இயங்குகை மற்றும் பொதுநிதியின் உரியவாறான முகாமைத்துவம் என்பவற்றுக்குப் பொறுப்பாக விளங்கும் தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் கௌவரத்தையும், சுயாதீனத்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் அதற்குரிய நியமனத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியையும், அரசியலமைப்புப்பேரவையையும் வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.