கணுக்கேணிக் குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரமைப்பிற்கு ரவிகரன் எம்.பியால் நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலைச் சீரமைப்பதற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 350, 000 ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறித்தபகுதிக்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், அதனைத் தொடர்ந்தே குறித்த வாய்க்கால் சீரமைப்பிற்கு தனது இவ்வாண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிற்குட்பட்ட  கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்கால் சீரின்றிக் காணப்படுவதால் அந்த வாய்காலின் கீழ் 51ஏக்கர் வரையில் நெற்செய்கை மேற்கொள்ளும் 28விவசாயிகள் தமது வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் முறையிட்டிருந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கமைய குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த வாய்க்கால் சீரின்மை தொடர்பில் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், பாதிப்பு நிலமைகள் தொடர்பில் விவசாயிகளுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இவ்வாறாக நிலமைகளை நேரில் பார்வையிட்டதுடன், பாதிப்புக்கள் தொடர்பிலும் விவசாயிகளிடம் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், 2026ஆம் ஆண்டிற்குரிய தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கணுக்கேணிக் குளத்தின் முதலாவது வாய்க்கால் சீரமைப்பிற்கான 350, 000 ரூபாயினை ஒதுக்கீடுசெய்து தருவதாக விவசாயிகளிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த வாய்க்காலைச் சீரமைப்பதால் தமது 51ஏக்கர்வரையிலான வயல்நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதிலுள்ள சிக்கல்நிலை தீருவதுடன், நீர் வீண்விரையமாவதும் தடுக்கப்பட்டு தமது நெற்செய்கை விளைச்சல் அதிகரிக்குமென விவசாயிகள் இதன்போது மகிழ்ச்சி வெளியிட்டனர்.

அத்தோடு தமது கோரிக்கையை ஏற்று வாய்க்கால் சீரமைப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டமைக்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கு விவசாயிகள் இதன்போது நன்றிகளையும் தெரிவித்தனர்.