ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளை வழங்குவதற்காக, பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணையாளர்களாக முன்னிலையான இருவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (6) உத்தரவிட்டது.
மேற்படி வழக்கு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
சாஞ்சி ஆராச்சிவத்தையைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் முகமது இர்ஷான் ஆகிய இருவரே வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
100 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட கபில சந்திரசேனவை தமக்கு யாரென்று தெரியாத நிலையிலும், தலா 15 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே தாம் பிணையாளர்களாக ஆஜரானதாக சந்தேகநபர்கள் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
‘தேவா’ மற்றும் ‘திஸ்ஸ’ எனப்படும் இருவரின் கோரிக்கைக்கு இணங்கவே தாம் இவ்வாறு ஆஜரானதாகவும், தமக்கு நிலையான வருமானம் அல்லது தொழில் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிணைச் சட்டத்தின்படி சந்தேகநபரை அறிந்தவர் மாத்திரமே பிணையாளர்களாக இருக்க முடியும் என்ற நிலையில், இவர்களுக்கும் கபில சந்திரசேனவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதையடுத்து, அவர்களின் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் பரிசோதித்து இருவரையும் கைது செய்திருந்தனர்.
சந்தே நபர்களின் பின்னணி மற்றும் அவர்கள் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட விதம் குறித்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைக் கருத்தில் கொண்ட நீதிவான், சந்தேகபருக்கு சார்பாக பிணையாளிகளாக முன்னிலையான இரு நபர்களையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் புதன்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கிலேயே கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.



