மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், மீட்டியாகொட பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 29ஆம் திகதி மீட்டியாகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மீட்டியாகொட – மாகொட பகுதியில் மனிதப்படுகொலை மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 07ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தற்போது இச்சந்தேகநபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
குறித்த விசாரணையின் போது சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய, நேற்று புதன்கிழமை இரவு மீட்டியாகொட பகுதியில் உள்ள காணி ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்கள் மற்றும் 09 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 13 தோட்டாக்கள் என்பன கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் மீட்டியாகொட பொலிஸார் இணைந்து இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





