காலி மாநகர சபையின் பெண் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தி, அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து மாநகர சபை உறுப்பினர்களும் புதன்கிழமை (31) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை (31) காலி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதற்கமைய காலி நீதவான் சந்கேநபர்களை தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
காலி மாநகர சபையின் விசேட பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (30) மேயர் சுனில் கமேகே தலைமையில் ஆரம்பமானது. இதன்போது, கடந்த அமர்வில் வரவு செலவுத் திட்டம் மோசடியான முறையில் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மேயரும் மாநகர சபை பெண் செயலாளரும் இணைந்து தமது வாக்குகளைத் திருடிவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பி சபையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
எதிர்க்கட்சியினரின் கடும் கூச்சல்களுக்கு மத்தியிலும் மேயர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றதுடன், வரவு செலவுத் திட்டம் ஆவணப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைச் செயலாளரைச் சூழ்ந்துகொண்டு அவர் மீது தமது கைகளில் இருந்த போத்தல்களிலுள்ள நீரை ஊற்றி அநாகரிகமான முறையில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அதிகாரி சபையிலிருந்து உடனடியாக வெளியேறினார். சபைக்குள் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அரசாங்க ஊழியர்களுக்குச் அநாகரிகமான முறையில் அழுத்தம் பிராயோகித்தமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக காலி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, ஐந்து உறுப்பினர்களும் புதன்கிழமை (31) கைது செய்யப்பட்டனர். அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜிலித் நிஷாந்த மற்றும் எம்.எம்.எம். யஸீர், பொதுஜன பெரமுனவின் நிமாலி சம்பிகா, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபாத் செனவிரத்ன மற்றும் கபில கொஹோம்பன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர்கள் காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களையும், பொலிஸாரின் பிணை ஆட்சேபனைகளையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்களைத் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது எனவும், விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நிபந்தனைகளில் மேலும் குறிப்பிடப்ப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





