திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் கண்டல் தாவரக் களப்பொன்றிலிருந்து, வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று(12.01.2026) சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண், கிண்ணியா, கிரான் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.கிண்ணியா, கிரான் பகுதியில் வசித்து வந்த குறித்த பெண், கடந்த ஜனவரி 8ஆம் திகதி பைசல் நகர் பகுதியில் உள்ள தனது பிள்ளைகளின் வீட்டுக்குச் செல்வதற்காக ஆற்றைக் கடந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களால் கடந்த 8ஆம் திகதி கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கண்டல் தாவரங்கள் நிறைந்த களப்புப் பகுதியில் இன்று துர்நாற்றம் வீசிய நிலையில், அப்பகுதி மக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அங்கு சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் ஆற்றைக் கடக்கும் போது தவறி விழுந்து மரணமடைந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



