கிரகரி ஏரி படகு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

நுவரெலியா கிரகரி ஏரியின் சுற்றுலா படகு சேவைகளை கடுமையான பாதுகாப்பு வழிகாட்டல்களின் கீழ் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர சபை மேயர் உபாலி வணிகசேகர அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (19)  இடம்பெற்ற இரண்டு சுற்றுலா படகுகளுக்கு இடையிலான விபத்தைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தை அடுத்து,  கிரகரி ஏரியில் படகு சேவையில் ஈடுபடும் சுமார் 120 படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டதாக நுவரெலியா மாநகர சபை மேயர்  தெரிவித்தார்.

இதன்போது பின்வரும் முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன அவையாவன, அனைத்துப் பயணிகளுக்கும் உயிர் காப்பு அங்கிகள் (Life Jackets) கட்டாயம் வழங்கப்பட வேண்டும்,  படகுகள் வேகம் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும், படகு சேவைகளை ஒழுக்கமான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்பனவாகும்.

ஞாயிற்றுக்கிழமை (19)  பிற்பகல் 2:30 மணியளவில் இரண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அதிவேகமாக வந்த மற்றொரு படகுடன் மோதியுள்ளது. இந்த மோதலினால் சுற்றுலாப் பயணிகளுடன் இருந்த படகு ஏரியில் கவிழ்ந்தது.

எனினும், ஏனைய படகு ஓட்டுநர்கள் உடனடியாகச் செயற்பட்டு இரண்டு சுற்றுலாப் பயணிகளையும் ஓட்டுநரையும் எவ்வித காயங்களுமின்றி மீட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு படகு ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்