யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ எனும் தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (24.02.2026) பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் கிவுல் ஓயாத் திட்டத்தின் ஊடாகத் தமிழ்மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள், யானை – மனித மோதல் போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இந்த திட்டத்தின் ஊடாக அரசாங்கம் அடைய நினைக்கும் மறைமுக இலக்குகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. விசேடமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ப.சத்திலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் ஏற்படவுள்ள பாதிப்புக்கள் தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டினர். கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்கள், அரசியல் தரப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ம ற்றும் சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்குக் கள விஜயம் செய்வது எனவும், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான கூட்டறிக்கையை உள்நாட்டிலுள்ள முற்போக்கு அமைப்புக்களுக்கும், சர்வதேச அமைப்புக்களுக்கும், தூதுவராலயங்களுக்கும் சமர்பிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.





