குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்றைய தினம் (26) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இவ்வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் ஸ்கேன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக, பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இந்தப் புதைகுழிப் பகுதியில் நவீன தொழில்நுட்பமான ‘ஆடியோ ஃப்ரீக்வன்சி மேக்னடோ டெல்லூரிக்’ முறைமையைப் பயன்படுத்தி ஸ்கேனிங் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வின் அடிப்படையிலான இறுதி அறிக்கையே இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஆராய்ந்த கௌரவ நீதிமன்றம், இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதுடன், அன்றைய தினம் திறந்த நீதிமன்றில் இவ்வழக்கினை மீண்டும் அழைப்பதற்கான கட்டளையையும் பிறப்பித்துள்ளது.

1990ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டு வந்தவர்கள் குருக்கள்மடம் பகுதியில் ஆயுததாரிகளினால் மறிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு எந்தவித சான்றுப் பொருட்களும் மீட்கப்படாத நிலையில் வழக்காளிகளின் சொந்த செலவில் ஸ்கேன் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.