மட்டக்களப்பு -வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்றைய தினம்(19) கடத்தப்பட்ட பெண் ஒருவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுக் கிணற்றினுள் இருந்து இன்று (20) குற்றுயிராக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் மீட்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் படி குறித்த கிணற்றிலிருந்து பிறிதொரு பெண்ணின் அழுகிய நிலையிலான சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொத்தியாபுலையினை சேர்ந்த 26வயதுடை முருகமூர்த்தி ரனுஜா என்னும் பெண் மகளுடன் வந்தபோது மகளை இழுத்துவீசிவிட்டு குறித்த பெண் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு குறித்த கிணற்றினுள் போடப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கொக்கட்டிகச்சோலைப் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் கிணற்றினுள் இருந்து மீட்கப்பட்ட மற்றுமொரு சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பதுவட்டை பகுதியில் காணாமல் போன பெண் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் காணப்பட்ட பாதணியைக் கொண்டு குறித்த பெண் என உறவினர்கள் அடையாளம் காட்டியபோதிலும் முறையான மரண விசாரணை மற்றும் டிஎன்ஏ சோதனையின் மூலமே அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் அவர்கள் குறித்த சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல பணிப்புரை விடுத்தார்.
வவுணதீவில் கடத்தப்பட்ட பெண்ணும் வெல்லவெளி பொலிஸ் பிரிவிலும் கடத்தப்பட்ட ஒருவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு இடத்தின் கிணற்றில் போடப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்களினால் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
பெண்கள் கடத்தப்பட்டு அவர்களின் தங்க நகைகள் களவாடப்பட்ட பின்னர் இந்த கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே பின்னணி குறித்து வெளியிடமுடியும் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.





