கொத்மலை நீர்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிக்க தடை

கொத்மலை நீர்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

பணிப்பாளர் நாயகம் புதன்கிழமை (10) கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டை பார்வையிட்ட பின்னர், கொத்மலை மகாவலி அதிகார சபையில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்காலத்தில் கொத்தமலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறப்பதற்கு முன்னர் மக்களுக்கான அறிவிப்பை தற்போது நடைமுறையிலுள்ள முறையை விட வேறு முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

பிரதான வீதிகள் தடைப்பட்டுள்ளதால் அணைக்கட்டின் ஊடாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை(9) முதல் அணைக்கட்டின் மீது கனரக வாகனங்கள் செல்ல முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடைப்பட்டுள்ள வீதிகள் சீராகும் வரை இலகு ரக வாகனங்கள் மாத்திரம் அணைக்கட்டின் மீது பயணிக்க அனுமதியளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திரகரத்தன மற்றும் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் கம்பளை– நுவரெலியா வீதி இலகு ரக வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

இதே வேளை கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பது தொடர்பில் இந்நாட்களில் பரப்பப்படும் பொய்யான வதந்திகள் எனவும், தரவுகளின் அடிப்படையில் வான் கதவுகளை திறப்பதற்கு கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே.ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.