இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அதன் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியவை, சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்த 12-வது சர்வதேச யோகா தின நிகழ்வு இன்று (21) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிக உற்சாகமாக நடைபெற்றது.
இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்பதாகும். ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்தும் வகையிலும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதனின் இயக்கம், வலிமை, மனநலம் மற்றும் சுதந்திரமான செயல்பாட்டை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் இக்கருப்பொருள் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படைகளின் அதிகாரிகள், இலங்கை பொலிஸார், யோகா நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான யோகா ஆர்வலர்கள், மாணவர்கள் இணைந்து யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இலங்கையின் பல பாகங்களிலும் இந்த 12-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்கள் மிக விரிவாக முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பு பிரதான நிகழ்வுக்கு இணையாக யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் தூதரகங்களும், கண்டியில் உள்ள உதவி உயர்ஸ்தானிகராலயமும் சிறப்பு யோகா நிகழ்வுகளை நடத்தின.
ஒரு முன்னோடி நிகழ்வாக, கடந்த 18 ஆம் திகதி இலங்கை சுகாதார அமைச்சின் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் இணைந்து, நாட்டின் 112 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஒரே நேரத்தில் யோகா அமர்வுகளை வெற்றிகரமாக நடத்தின.
கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், கொழும்பு மாநகர சபை, ஸ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனம் (மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து சுமார் 55 யோகா நிகழ்வுகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆதரவளித்துள்ளது.
நிகழ்வு நடைபெற்ற சுதந்திர சதுக்க வளாகத்தில் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் நல்வாழ்வு குறித்த விபரங்களை வழங்கும் ‘ஆயுஷ் தகவல் மையம்’ அமைக்கப்பட்டிருந்தது. இதில் ‘சித்தலேபா ஆயுர்வேத’ மருத்துவக் குழுவினர் பங்கேற்பாளர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதோடு, ஆயுர்வேதத்தின் சிகிச்சை நன்மைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் முன்மொழியப்பட்டு, ஐநா பொதுச் சபையில் (UNGA) 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை வழிமொழிந்த முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.










