கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேதவத்த பகுதியில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, நவீன ரக பிஸ்டல் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (03) சேதவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 06 கிராம் 810 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் முதலாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது, அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிஸ்டல் ரகத் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
குறித்த துப்பாக்கியை வழங்கிய நபர் குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதே பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் 13 கிராம் 850 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்தத் துப்பாக்கியானது, தற்போது சிறைச்சாலையில் உள்ள பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 38 வயதுடைய சேதவத்த மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





