சனிக்கிழமை விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள் சங்கம்.!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் விலை உயர்வு காரணமாக சுகாதாரத் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமையை மருத்துவர்களுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அறிவிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பாக வெளிமாவட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்கள் தினமும் நீண்ட தூரங்கள் பயணிக்க வேண்டியிருப்பதாகவும், தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் அவர்களின் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து கட்டுப்பாடற்ற நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் தடையின்றி நடைபெற, வாராந்த வேலை நாட்களை மறுசீரமைத்து சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பது அவசியம் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.மேலும், ஏனைய அரச துறை ஊழியர்களுக்கு எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற போதிலும், மருத்துவ நிபுணர்களுக்கு போதுமான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலை, குறிப்பாக தூரப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றும் மருத்துவர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு உடனடி தீர்வு காணப்படாவிட்டால், விசேட மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடலுக்கு தயாராக இருப்பதாகவும், பொதுமக்களுக்குதொடர்ச்சியான சுகாதார சேவைகளை வழங்க இது அவசியமானது என்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.