சபுகஸ்கந்த – தெனிமுல்ல வீதிவிபத்துச் சம்பவத்தில் கடமை தவறிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சபுகஸ்கந்த – கல்வல சந்தியிலிருந்து பவர்-ஹவுஸ் சந்தி வரை செல்லும் வீதியில், தெனிமுல்ல அருகே, முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல ஓட்டிச்சென்ற ஜீப் ரக வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதி கடந்த 11ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து தொடர்பாக சபுகஸ்கந்த பொலிஸார் முறையாக விசாரணை நடத்தி தங்கள் கடமைகளைச் செய்தார்களா என்பது குறித்து, போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், பிரதி பொலிஸ் ஆய்வாளரின் உத்தரவிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுத்த சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தை மேற்பார்வையிடும் சிரேஸ்ட அரச அதிகாரிகள் கடமை தவறியமை கண்டறியப்பட்டது.
இந்நிலையில், குறித்த அதிகாரிகள் மீது முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்து, நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு பொலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.





