சபையின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்கவேண்டும்

வக்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனத்தின்போது அரசியல்வாதிகள் வியாபாரிகள் நேரடியாக உள்ளீர்க்கப்படுவதை தவிர்த்து அதன் சுயாதீனத் தன்மையை பாதுகாக்க வேண்டும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணி முஸ்லிம் கலாசார அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம். பைசல்  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வக்பு வாரியம் என்பது முஸ்லிம் சமூகத்தின் மத மற்றும் சமூக நலன்களுடன் தொடர்புடைய மிக முக்கியமான அமைப்பாகும். வக்பு சொத்துகள் மற்றும் நிதிகள் சமூக நலனுக்காகவும்,  பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கமாகும்.

ஆனால் இவ்வமைப்பின் செயல்பாடுகளில் அரசியல்வாதிகள் அல்லது வணிக நலன்களுடன் தொடர்புடையவர்கள் நேரடியாக உள்ளடக்கப்படும்போது, அதன் சுயாதீனத்தன்மை பாதிக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது.

மேலும் அரசியல்வாதிகளின் பிரதிநிதித்துவம்  அரசியல்வாதிகளின் கைக்கூலிகளையும் இவ்வமைப்புக்குள் கொண்டுவரக் கூடாது மற்றும் பேரம் பேசி வருகின்ற அரசியல் சக்திகளின் பிரதிநிதிகளும் இவ்வமைப்புக்குள் வரக்கூடாது. இதுவே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகவும் அரசியல் போட்டிகள் அல்லது வணிக நலன்கள் வக்பு வாரியத்தின் முடிவுகளை பாதிக்கக்கூடாது.

எனவே, வக்பு சபைக்கான உறுப்பினர்களை நியமிக்கும் போது சமூக சேவையில் அனுபவமுள்ளவர்கள், மத அறிவும் நேர்மையும் கொண்டவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக அரசியல்வாதிகள் அல்லது வணிக நலன்களுடன் தொடர்புடையவர்கள் இந்த அமைப்பில் சேர்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பாகும்.

வக்பு வாரியத்தின் நம்பகத்தன்மையும் சுயாதீனத்தன்மையும் பாதுகாக்கப்படுவது முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு மிகவும் அவசியமானது என்பதை கருத்தில் கொண்டு, முஸ்லிம் கலாசார அமைச்சு இவ்விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.