சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுடன் நிலக்கரி ஒப்பந்தம்

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி நாட்டில் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் உயர்மட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்து ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுடன் இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் கலந்துரையாடியுள்ளார். இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கூடிய விரைவில் குறிப்பிட்டளவு நிலக்கரி தொகையை கொள்வனவு செய்யவும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயல்பாடுகளை சீராக முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

இலங்கையின் தற்போதைய காலநிலை மற்றும் சமகால புவிசார் அரசியல் நிலைமைகளின் அடிப்படையில் நாட்டின் எரிபொருள் துறை, நீர்மின் உற்பத்தி மற்றும் அனல் மின்நிலைய செயற்பாடுகள் நெருக்கடிளை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக வலுசக்தி துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. இவ்வாறானதொரு நிலையில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டுக்கள் நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. இருப்பினும் ரஷ;யாவுடன் புதிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி எரிபொருள் இறக்குமதிக்கு பேச்சுக்களை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் நிலக்கரி கொள்வனவு இடம்பெற்றிருக்க வில்லை. ரஷ;ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவின் இலங்கை விஜயத்தின் போதே நிலக்கரி கொள்வனவு குறித்து பேசப்பட்டுள்ளது.

ரஷ்ய எரிபொருள் மீதான அமெரிக்காவின் தடைகள் தற்போது முப்பது நாட்களுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கத்தில் நிலக்கரி உள்வாங்கப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலையில் எவ்வாறு ரஷ;யாவிடமிருந்து நிலக்கரியை கொள்வனவு செய்து என்பது குறித்து இராஜதந்திர மட்டத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றது. மறுபுறம் இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு அணுமின் நிலையத் திட்டத்தை வழங்க ரஷ்யா முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது.

ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் இலங்கை விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ள அதேவேளை, எண்ணெய் கொள்வனவுக்கான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்ததற்குப் பதிலளித்துள்ள ரஷ்யா, ஆரம்பகட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு கப்பல்களைப் பெற்ற பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைப் பெறுவதற்கான நிரந்தர ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைக்கு இலங்கை சம்மதித்தால் மட்டுமே, மேலதிக ஒப்பந்தங்களுக்காக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என ரஷ்ய தரப்பு அறிவித்த நிலையிலேயே  நிலக்கரி கொள்வனவு குறித்து பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.