சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை!

இலங்கைக்கு ஒன்பது நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்கான உபகுழுவின் பிரதிநிதிகள் தமது கள ஆய்வுகளின் அடிப்படையிலான இரகசிய முதற்கட்ட அவதானிப்பு அறிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

கடந்த ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக்குழுவினர், நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு கைதிகளின் நிலைமைகளை ஆராய்ந்ததுடன், தங்களது ஒன்பது நாள் விஜயத்தை எதிர்வரும் புதன்கிழமை நிறைவு செய்யவுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு விஜயத்திற்குப் பின்னர், சித்திரவதைகளைத் தடுப்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து மதிப்பிடுவதே குறித்த குழுவினரின் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன் ஒருகட்டமாக, வெளிவிவகார அமைச்சில் கடந்த வாரம் விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது சித்திரவதைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஐ.நா. குழுவினர் கேள்விகளை எழுப்பியதுடன், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் 16 ஆவது பிரிவுக்கு இணங்க, இந்த முதற்கட்ட அவதானிப்புகள் இலங்கை அரசாங்கத்திற்கும் தேசிய தடுப்பு பொறிமுறைக்கும் இரகசியமான முறையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, விரிவான பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை இக்குழுவினர் தயாரிப்பார்கள். சர்வதேச விதிகளின்படி, இலங்கை அரசாங்கம் அனுமதித்து கோரிக்கை விடுத்தால் மட்டுமே குறித்த குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்பதுடன், கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னரான அறிக்கையும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.