சிறிலங்கா ஜனாதிபதி அநுர பிரான்ஸ் விஜயம்

உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்ஸ் செல்ல உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா தெரிவித்தார். இந்த முக்கியத்துவமிக்க விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட சில முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

உலக வங்கி மற்றும் பிரெஞ்சு கப்பல் நிறுவனமான சி.எம்.ஏ. – சி.ஜி.எம். ஆகியவற்றின் அண்மைக்கால முக்கிய அறிவிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடல்சார் வர்த்தக அபிலாஷைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தியோகபூர்வ பயணம் அமையவுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைத்துக் கொள்வது மற்றும் அதனை மேலும் சாதகமாகப் பயன்படுத்துவது தொடர்பிலும், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஐரோப்பிய சந்தையில் உள்ள வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் இருதரப்பு மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் போது பிரதான கவனம் செலுத்தப்படவுள்ளது.

முன்னதாக, பிரான்சின் இரண்டாவது பெரிய கப்பல் நிறுவனமான சி.எம்.ஏ. – சி.ஜி.எம், கொழும்பு துறைமுகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுரா கருணாதிலக்க மற்றும் இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் ரெமி லம்பேர்ட் ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடலின் போதே இந்தத் தகவல் முதன்முதலில் வெளியானது.

இச்சந்திப்பின் போது, உலகின் முன்னணி கப்பல் நிறுவனமான சி.எம்.ஏ. சி.ஜி.எம்.-இன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ரோடால்ஃப் சாடே மஹானாவுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரான்ஸில் வைத்து ஒரு விசேட சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தூதுவர் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார். பிரெஞ்சு முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் தனது நாடு மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் தூதுவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த முதலீட்டுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய சி.எம்.ஏ. சி.ஜி.எம். நிறுவனத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் திருமதி கிறிஸ்டின் கபோட், உலகெங்கிலும் உள்ள முக்கிய துறைமுகங்களில் 65-க்கும் மேற்பட்ட கொள்கலன் முனையங்களைச் சொந்தமாகக் கொண்டு தங்களது நிறுவனம் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

கொழும்புத் துறைமுகத்தின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் காரணமாக, கொள்கலன் மறு ஏற்றுமதி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பெரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், கூட்டு முயற்சி முதலீடுகள் மூலம் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் போக்குவரத்தின் அளவை அதிகரிப்பதில் தீவிர கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். அத்துடன், கொழும்புத் துறைமுக மேற்கு முனையத் திட்டத்தின் இரண்டாம் கட்ட முதலீட்டு சாத்தியக்கூறுகள் குறித்தும் தமது நிறுவனம் ஆழமாக ஆய்வு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வாரம் உலக வங்கியும் கொழும்பு துறைமுகம் தொடர்பாக மிக முக்கியமானதொரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தது. கொழும்பு துறைமுகத்தின் பிராந்திய முக்கியத்துவம் மற்றும் அங்கு அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்டமைப்பு முதலீடுகள் குறித்து அந்த அறிக்கையில் விரிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக இடம்பெற்ற செர்ஜியோ கோரின் இலங்கை பயணம், போல் கபூரின் இலங்கை பயணங்கள், பிரான்சின் முன்னணி கப்பல் நிறுவனத்தின் முதலீட்டு ஆர்வம் மற்றும் கொழும்பு துறைமுகம் குறித்த உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை என்பன இலங்கையின் கடல்சார் பொருளாதாரம் சர்வதேச மட்டத்தில் உற்றுநோக்கப்படுவதை உறுதிசெய்துள்ளன. இந்த பின்னணியில், ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயமானது துறைமுக அபிவிருத்தி, ஐரோப்பிய முதலீடுகள் மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை நீடிப்பு ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.