களுத்துறை தெற்கு பகுதியில், இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் சீருடையைக் கிழித்த குற்றச்சாட்டில் லொறி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி லொறியை ஆபத்தான முறையில் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, நாகொடை சந்தியில் அமைந்துள்ள வீதித் தடையில் வைத்து பொலிஸார் லொறியைச் சோதனையிட முற்பட்டபோது இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.
இதன்போது, சந்தேக நபர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த மோதலின்போது காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சைகளுக்காக நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதான நபர் பயாகல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





