தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கிய ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ள பின்னணியில் முன்வைக்கப்படும் இந்த கேள்விகளுக்கு பதிலை ஆராய்வது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
இலங்கை இராணுவத்தால் தேடப்பட்ட கோபிஇ அப்பன் மற்றும் தேவிகன் ஆகியோர் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் அரசியல்வாதி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் 2000 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு வவுனியா நெடுங்கேணி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதில் காட்டிக்கொடுக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் இவ்விடயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே இது தொடர்பான புகைப்படத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வெற்றிபெற வைக்கவே புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றார் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்ற இந்த மூவரும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பியோட முயற்சித்த நிலையில் மூவரும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.எனவே இந்த சம்பவத்தையும் மீண்டும் விசாரணை செய்தால் தற்போதைய விசாரணைகளுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.
அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களை நான் தனிப்பட்ட முறையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கிறேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதங்கள் தற்போது கிடைக்கப்பெறுகின்றன. இவர்கள் வைத்த ஆயுதங்களை இவர்களே தற்போது மீள வழங்குகிறார்கள். இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வேண்டும். அது தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, முன்வைக்கப்பட்ட விடயங்களில் ஒருபகுதி பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையதுஇஆகவே விரிவான பதிலை நாளை (இன்று வெள்ளிக்கிழமை ) முன்வைக்கிறேன் என்றார்.



