செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் நான்கு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள்: ஆடையை ஒத்த துணியும் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வியாழக்கிழமை (03.07.2025) அகழ்வின் போது சிறுவர்களுடையது எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளுடன் நான்கு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 34 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செய்மதிப் படங்கள் மூலம் புதைகுழிகள் இருக்கலாமெனச் சந்தேகிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை  மாணவர்களின் பங்கேற்புடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் ஆடையை ஒத்த துணியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்படாமையால் அது எந்த வகையான துணி எனக் குறிப்பிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.