நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அடுத்த வருடம் ஜனவரி மாதம்-01 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் லஞ்சீற் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளது. இதன்படி 01 ஆம் திகதி முதல் உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என்பன உணவுப் பரிமாற்றத்தின் போது லஞ்சீற் பயன்படுத்த முடியாது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்குமிடையில் செவ்வாய்க்கிழமை (16.12.2025) நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் உணவகங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் உள்ளதாவது,
திருமண மண்டபங்களில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு வருகைதருவோர் தங்களுடைய வாகனங்களைப் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நிறுத்துவதற்கு ஏற்றஒழுங்குகளை மண்டப உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அதனைக் கண்காணிக்கவும் வேண்டும்.
உணவுகளைத் தயாரித்தல், கையாளுதல் ஆகியவற்றில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள், திருமண மண்டபங்கள் அனைத்தும் கட்டணக் கழிவகற்றல் முறைமையின் கீழ் தங்களை உடன் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கான வியாபார உரிமங்கள் ரத்துச் செய்யப்படும்.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இன்னமும் பதிவு செய்யப்படாத உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்களை நடாத்துபவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம்- 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதிகளை நடாத்துகின்ற விடுதி உரிமையாளர்கள் தங்களுடைய விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் ஏனையோருக்குக் கழிவகற்றல் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டியதுடன் அவர்கள் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை இடுவதற்கு வசதியாக தங்களுடைய விடுதிகளில் கழிவுத் தொட்டிகள் வைக்கப்பட வேண்டும். குறித்த விடயங்கள் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றனவா? என்பதைச் சுகாதாரப் பரிசோதகர்கள், இறைவரிப் பரிசோதகர்கள் நேரில் கண்காணித்து அறிக்கையிடுவர்.
இந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் உணவகங்கள், விடுதிகள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் உரிமங்கள் ரத்துச் செய்யப்படுவதுடன் உரிய சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




