ஜே.வி.பி.யின் வரலாறு மீள ஆரம்பமாகின்றதா? ; நிதியமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்து முஜிபுர் ரஹ்மான்

நிதியமைச்சின் அதிகாரி ஒருவரின் மரணம் தொடர்பில் தற்கொலை என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இது 1988, 1989 காலப்பகுதிகளில் ஜே.வி.பி.யினரால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு வன்முறைகளின் தொடர்ச்சியா என்ற பாரிய சந்தேகம் ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் 2.5 மில்லியன் டொலர் விவகாரத்தில் சிக்கியுள்ள அரசாங்கம், அதிகாரிகளை பலிகடாக்களாக்கி தப்பிக்க முயல்வதாகவும், இந்த ஊழல் அரசாங்கத்தை விரட்டியடிக்க வெகுவிரைவில் வீதிப்போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டம்  வெள்ளிக்கிழமை (01) கொழும்பு –மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஆட்சிக்கு வர முன்னர் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் பாரிய பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி இன்று அந்த உரிமைகளை மீறும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் கூறியவர்களுக்கு இன்று கொழும்பில் தொழிலாளர் தினத்தை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இவர்கள் ஆட்சியமைக்க முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால் அவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இன்று பெலவத்தையில் தினமும் கூடிப் பேசுகின்றனர். அவர்கள் என்ன திட்டமிட்டாலும் மக்களை ஒடுக்க முயற்சிக்கும் இந்த அரசாங்கத்தை விரட்டியப்பதற்கான வீதிப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கும்.

இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நுவரெலியா செல்கின்றனர். கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஜே.வி.பி. கூட்டங்களை நடத்துகின்றது. அன்று ஆட்சியாளர்களுக்கு உலங்கு வானூர்தி எதற்கு என கேள்வியெழுப்பிய அநுரகுமார திஸாநாயக்க, இன்று தனது கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நுவரெலியாவிலிருந்து உலங்கு வானூர்தியில் மஹரகம செல்கின்றார்.

கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டு பிடிப்பதாகக் கூறியவர்கள் இன்று திறைசேரி நிதியிலேயே பாரதூரமான மோசடிகளில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளனர். 2.5 மில்லியன் டொலர் விவகாரம் தொடர்பில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவர் 1988, 1989களில் காணப்பட்ட ஜே.வி.பி. வன்முறையாளர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்காகியுள்ளாரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகிறது.

அரசாங்கத்தில் இடம்பெறும் சகல ஊழல், மோசடிகளுக்கும் அரச அதிகாரிகள் மீது குற்றஞ்சுமத்திவிட்டு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றனர். இந்த அரசாங்கம் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. மக்கள் மாத்திரமின்றி தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் என அனைவரும் அரசாங்கத்திடமிருந்து விலகிக் செல்கின்றனர். எனவே இந்த அரசாங்கத்தை விரைவில் வெளியேற்றுவதற்கான வீதி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தயாராகுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.