தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விசேட நடவடிக்கை: 80 பேர் கைது!

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் இன்று செவ்வாய்க்கிழமை (07) முன்னெடுக்கப்பட்ட இரண்டு மணிநேர விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை மற்றும் அதனைச் சூழவுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்தவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில்; விவசாயிகளின் மரக்கறி மூட்டைகள் திருடப்படுதல், வாகனங்களின் உதிரிப்பாகங்கள்; திருடப்படுதல் போன்ற சமூக விரோதச் செயல்கள் அதிகரித்திருந்தமையே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.