திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.
இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் ரூபா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளை மேற்படி 10 எதிராளிகளும் சமர்பிக்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அனைத்து எதிராளிகளும் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் தவறாது சமூகமளிக்க வேண்டும்,சாட்சிகளை பயமுறுத்த கூடாது,பிரதேசத்தின் பொது அமைதி மற்றும் சமய சகவாழ்விற்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனைகளும் மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.இவ் நிபந்தையில் ஒன்றோ அனைத்துமோ எதிராளிகளால் மீறப்பட்டால் பிணை உடனடியாக இடைநிறுத்தப்பட்டு விளக்கமறியல் நடைமுறைக்கு வரும் எனவும் மேல் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




