திறமையின்மையை மறைப்பதற்காக பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சேறுபூசல்களில் ஈடுபடும் அரசாங்கம்

அரசாங்கம் தனது திறமையின்மையை மறைப்பதற்காகவே பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சேறுபூசல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில்  சனிக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசி, நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன கூறியிருந்தார். பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இத்தகைய பொய்யான பிரசாரங்களை அரசாங்கம் மேற்கொள்வது வருத்தமளிக்கிறது.

கடந்த தேர்தலின் போது சட்டத்தரணிகளில் பெரும்பான்மையானோர் தனிப்பட்ட ரீதியில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்திருந்தபோதிலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒரு சுயாதீனமான அமைப்பாகவே எப்போதும் செயல்பட்டுத் தனது கௌரவத்தைப் பாதுகாத்து வந்துள்ளது. இவ்வாறான தொழில்சார் வல்லுநர்களையும் கௌரவமிக்க அமைப்புகளையும் இலக்கு வைத்து அரசாங்கம் பொய்களைப் பரப்புவது வேடிக்கையானது.

பொய்களைக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம், மீண்டும் அதே பொய்கள் மூலமாகவே ஆட்சியைத் தக்கவைக்க முயல்கிறது. இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிராகவும், நாட்டின் சுயாதீன அமைப்புகளின் கௌரவத்தைப் பாதுகாக்கவும் எதிர்க்கட்சி என்ற ரீதியில் தாம் உறுதியாக நிற்கின்றோம் என்றார்.

சமீபத்திய செய்திகள்