தெஹியோவிட்ட வன அலுவலக அதிகாரிகள் உட்பட 5 பேர் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் கைது!

மரப்பலகைகளை  ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்காக இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தெஹியோவிட்ட வன அலுவலகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் மற்றும் மரகாலை உரிமையாளர் உட்பட ஐவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைவாக, கடந்த மார்ச் 17ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.  குறித்த முறைப்பாட்டாளர் தனது புதிய வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களுக்காக கொள்வனவு செய்த மரங்களை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே  அவரிடம் இலஞ்சம் கோரி பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மரகாலை உரிமையாளரே முதலில், வன அலுவலக அதிகாரிகளுக்கு வழங்குவதாக  தெரிவித்து  முறைப்பாட்டாளரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு பரிந்துரை செய்தல் மற்றும் ஏனைய அலுவலகப் பணிகளை முன்னெடுப்பதற்காக குறித்த மரகாலை உரிமையாளரிடமிருந்து  பெற்றபணத்தை முறையே  வன அலுவலக அதிகாரிகளுக்கு பகிர்ந்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மரகாலை உரிமையாளர்  மரக்காலையில் வைத்து  கைது செய்யப்பட்டார்.  அதனைத் தொடர்ந்து ஏனைய நான்கு அதிகாரிகளும் தெஹியோவிட்ட வன அலுவலக வளாகத்தில் வைத்து மாலை 3.20 மணி முதல் 5.02 மணி வரையான காலப்பகுதிக்குள் கைது செய்யப்பட்டனர்.  சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.