நிலக்கரி ஊழலால் ஏற்பட்ட இழப்பை வரிகள் மூலம் மறைமுகமாக மக்களிடம் வசூலிக்க தயாராகும் அரசாங்கம்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், இம்மாதம் 10ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழலால் ஏற்பட்ட 18 பில்லியன் ரூபாய் இழப்பை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியும், அரசாங்கம் அதை மறைமுகமாக வரிகள் மூலம் மக்களிடமே வசூலிக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டம் வெள்ளிக்கிழமை (1) கொழும்பு – மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவையாகும். நரிகள் தங்களை விசேஷமானவை என்று காட்டிக்கொள்ள பச்சை வண்ணம் பூசிக்கொண்டன. ஆனால் மழை பெய்தபோது அந்த வண்ணம் கரைந்து அவற்றின் உண்மை முகம் தெரிந்துவிட்டது. அதேபோல், ஜே.வி.பி தலைமையிலான இந்த அரசாங்கமும் மக்களை ஏமாற்றியிருக்கிறது. இப்போது அவர்களின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.

வீடு கட்டும்போது நிதி உதவி வழங்கப்படும் என்று 42 லட்சம் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, கொழும்பு போன்ற நகரங்களில் வீடு கட்டுவது இன்று மிகவும் கடினமாகியுள்ளது. புத்தளம் பகுதியில் பெண்களின் தலைமுடியில் அதிகளவு பாதரசம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எதிர்கால சந்ததியினரைப் பாதிக்கும் ஒரு பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாகும்.

முதியவர்களுக்கு வங்கிகளை விட அதிக வட்டி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், 2026 ஜனவரி முதல் ஊழியர் சேமலாப நிதிய வட்டி வீதம் பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து, விவசாய உபகரணங்கள் மற்றும் சூரிய சக்தி மின்களங்கள் என்பவற்றுக்கு வட் வரியை நீக்குவதாகக் கூறிவிட்டு, நடைமுறையில் சமூகப் பாதுகாப்பு வரியுடன் சேர்த்து சுமார் 22 வீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், மே 10ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழலால் ஏற்பட்ட 18 பில்லியன் ரூபாய் இழப்பை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியும், அரசாங்கம் அதை மறைமுகமாக வரிகள் மூலம் மக்களிடமே வசூலிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு வழங்கப்பட்ட வரிச்லுகை வாக்குறுதிகளும் மீறப்பட்டுள்ளன. நாட்டை ஒரு சிறிய எல்லைக்குள் சிந்தித்துப் பார்த்தால் முன்னேற்ற முடியாது. இந்தியப் பெருங்கடலின் மையப்புள்ளியாக இருக்கும் இலங்கையின் உற்பத்தியைப் பெருக்கி உலகச் சந்தையை வெல்ல வேண்டும்.

வறுமையில் வாடும் 54 இலட்சம் மக்களைக் காப்பாற்றவும், நாட்டை பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பவும் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினரால் மட்டுமே முடியும். அந்த ஆட்சியை உருவாக்குவதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு கோருகின்றோம் என்றார்.