நிலக்கரி கொள்முதல் சர்ச்சை: பதிவு செய்யாத நிறுவனத்திற்கு கேள்விக்கோரல் – அஜித் பி பெரேரா

இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றுக்கே அரசாங்கம் நிலக்கரி கொள்வனவுக்கான கேள்விக்கோரலை வழங்கி இருக்கிறது. அதேநேரம் நிலக்கரி தரம் குறித்து பரிசோதிப்பதற்கு அங்கீகாரம் இல்லாத நிறுவனமே இதுவரை காலமும் நிலக்கரி தரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம்,விளையாட்டில் ஊக்கப்பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

லக்விஜய மின்சாரசபைக்காக இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் நிலக்கரி விலைக்கு பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தொடர்பில் 2026 ஏப்ரல் 2ஆம் திகதி தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சுயாதீன நிலைப்பாடு ஒன்றை நாட்டு மக்கள் இதுவரை எதிர்பார்த்திருந்தனர்.

இந்த அரசாங்கத்தின் கீழ் வலுசக்தி அமைச்சரின் தலைமையில் அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சராக அரச தலைவராக இருக்கும் நிலையில் இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக இந்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி மாேசடி இடம்பெற்றிருப்பதை சாப்பிட்டு பார்த்தா தெரிந்துகொள்வது என ஜனாதிபதி இந்த சபையில் கேட்டிருந்தார். ஆனால் ஆவணங்களை பரீட்சித்து பார்ப்பதன் மூலம் இங்கு மோசடி இடம்பெற்றுள்ளதை கணக்காய்வாளர் நாயகத்துக்கு கண்டுபிடிக்க முடியுமாகி இருக்கிறது.

மேலும் நிலக்கரி கொள்வனவுக்காக கேள்விக்கோரலை வழங்கி இருக்கும் நிறுவனம் 2025,ஆகஸ்ட் 18 ஆம் திகதியில் பதிவு செய்திருக்கவில்லை. இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றுக்கே இந்த கேள்விக்கோரலை வழங்கி இருக்கிறது. இது தொடர்பில் அரசாங்கம் வெட்கப்படவேண்டும்.

ஜனாதிபதி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கிய பணத்துக்கும் அதிகமான நட்டம் இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நிலக்கரியின் தரம் குறித்து ஆய்வு அறிக்கைகளில் முரண்பாடுகள் இருந்தாலும், அம்பய மாதிரிகளை பரிசோதிப்பதன் மூலம் இந்த முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள முடியுமாகி இருந்தபோதும், இன்றுவரை அம்பய மாதிரி பரிசோதிக்கப்படாமல் இருப்பது தவறு, அது மோசடி என கணக்காளர்  நாயகம் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம் இந்த நிலக்கரி தரம் குறித்து பரிசோதிப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் நிறுவனத்துக்கு அதுதொடர்பில் அங்கீகாரம் இல்லை. அங்கீகாரம் இல்லாத நிறுவனமே இதுவரை காலமும் இந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.

அத்துடன் தற்போது 3 இலட்சம் மெட்ரிக்தொன் நிலக்கரி அவசர கொள்வனவுக்காக அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் அது தொடர்பில் அடிப்படை தகுதிகளை பூரணப்படுத்தியிருக்கவில்லை என கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த நலக்கரி கொள்வனவு தொடர்பில் இதுவரை காலமுமும் அரசாங்கம் தெரிவித்துவந்த பொய் பிரசாரம் தொடர்பில் மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அமைச்சர் பதவி விலகவேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகள்