நிலக்கரி மோசடி: ஜனாதிபதியும் ஒரு பங்காளி – சம்பிக்க குற்றச்சாட்டு

தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதியும் இந்த மோசடியின் பங்காளியாக உள்ளார். அவரும் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அவிசாவெளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தரமற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் அதனால் ஏற்பட்ட நட்டம் குறித்து பாராளுமன்றத்தில் பல விடயங்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் ஜனாதிபதி அந்த விடயங்களை அலட்சியப்படுத்தி வருகிறார்.நிலக்கரி விலைமனுகோரலில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை. உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்தே நிலக்கரி கொள்வனவு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதியும் இந்த மோசடியின் பங்காளியாக உள்ளார். அவரும் பொறுப்புக்கூற வேண்டும்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பாராளுமன்ற குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் நான்கு பிரதான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 2024.09.21 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயங்கள் இன்று அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. அன்று குறிப்பிட்ட விடயங்களுக்கு ஜனாதிபதி இன்று பதிலளிக்க வேண்டும்.

இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்தியதால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இயந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும், இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக ஏற்பட்டுள்ள நிதி இழப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் எதிர்காலத்தில் மின்விநியோக துண்டிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட நான்கு பிரதான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது ஜனாதிபதியின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்துள்ளது. 75 ஆண்டுகால அரசியல் கட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழல் மோசடிகளை முன்னிலைப்படுத்தியே செயற்படுகிறார்கள். ஜனாதிபதியின் பொறுப்பற்ற இந்த செயற்பாட்டுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் மக்கள் பதிலளிப்பார்கள் என்றார்.