நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் கைது!

நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ராஜபக்ஷ பதிரகே சேபாலிகா சமன் குமாரி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊழல் மற்றும் நிகி மோசடி குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான அரச காணிக்குரிய நஷ்டஈட்டு கொடுப்பனவு தொடர்பாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட அதிகாரிகளின் குழுவினாலும் நஷ்டஈடு வழங்குவதற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் சபையினாலும் இந்த சொத்துக்கான நஷ்டஈடு நிராகரிக்கப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால்.2024 ஆம் ஆண்டு சமன் குமாரி, மனோஜி ஹேமலால் ஏகநாயக்கவுக்கு நிதியுதவியை விடுவிப்பதற்கு ஒப்புதல் கோரி, இலங்கை மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பணிப்பாளர் சபையின் முறையான ஒப்புதல் இன்றி இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நீதி அமைச்சின் மேலதிக செயலாளரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.