உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எதிர்ப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதனை மீறி அரசாங்கம் செயல்பட முற்படுமாயின் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
கொழும்பு, ஜா-எல பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
தற்போது அரசாங்கம் நாட்டின் ஏனைய அனைத்து முக்கிய பிரச்சினைகளையும் மூடிமறைத்துவிட்டு, உன்னதமான நீதித் துறையையும் நீதிமன்றக் கட்டமைப்பையும் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்த முற்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து, அவர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது.
குறிப்பாக, பாராளுமன்றத்தில் மக்கள்; விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ‘ராஜபக்ஷர்களின் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட வேண்டும்’ எனக் பகிரங்கமாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் நீதிமன்றக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதன் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் உண்மையான அரசியல் உள்நோக்கம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய முன்னணி சட்ட அமைப்புகள் அனைத்தும் அரசாங்கத்தின் இந்த நகர்வுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளன. கடந்த காலத்தில் போராட்டங்களின் போது சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டபோதெல்லாம் அதனை ஏற்றுக்கொண்டவர்கள், இன்று அச்சங்கம் அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அவர்களைப் பலவீனப்படுத்த முயல்கின்றனர்.
அரசாங்கத்தின் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரினதும், அமைச்சரினதும் பேச்சுக்களின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது, எதிர்கட்சியினரை அடக்குமுறைகள் மூலம் முடக்குவதற்கே இந்தக் கொடூரமான சட்ட மூலங்களைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அரசாங்கம் அவ்வாறு சட்டங்களைக் கொண்டுவர நினைத்தால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு உரிமை உள்ளது. ஆனால், நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலம் நீடிப்பு தொடர்பான சட்டமூலம் குறித்து நீதிமன்றத்தை நாடும்போது, நீதிபதிகளே தங்களின் சொந்தப் பதவிக் காலம் தொடர்பான தீர்ப்பை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் சங்கடமான சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர்.
எனவே, அரசாங்கம் உண்மையிலேயே சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட விரும்புமானால், இந்தத் திருத்தங்கள் குறித்துத் தீர்மானிக்கும் உரிமையை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
நாட்டின் விவசாயிகளின் உரப் பிரச்சினை, மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை, பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, பாடசாலை மாணவர்களின் கல்விப் பிரச்சினைகள், பெற்றோர்களின் கட்டுக்கடங்காத வாழ்க்கைச் செலவு மற்றும் நியாயமற்ற வரிச்சுமைகள் ஆகியவற்றை விட, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் அரசியலமைப்புத் திருத்தமே மிக முக்கியமானது என அரசாங்கம் கருதுமானால், தைரியமிருந்தால் மக்களிடம் சென்று சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்துக்குச் சவால் விடுக்கிறோம் .
சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் இதனை அங்கீகரித்தால், அதனை ஏற்றுக்கொள்வதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மக்களே இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.





