குருநாகல், நிக்கவெரட்டிய பகுதியில் குளத்தில் பட்டம் விடும் நூல் ஒன்றில் சிக்கி குளத்தினுள் தத்தளித்துக்கொண்டிருந்த கொக்கு ஒன்றை காப்பாற்ற முயன்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேபட குளத்தில் நபரொருவர் நீரில் மூழ்கியுள்ளதாக நேற்று (16) செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் நிக்கவெரட்டிய, திவுல்லகொட பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேபட குளப்பகுதியில் பட்டம் விடும் நூல் ஒன்றில் சிக்குண்டு பறக்க முடியாமல் கொக்கு ஒன்று குளத்து நீரில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளது. இதனை அவதானித்த குறித்த நபர், மேலும் சிலருடன் இணைந்து அந்த கொக்கை காப்பாற்றுவதற்காக குளத்தினுள் இறங்கியுள்ளார்.
இதன்போது எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பில் நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





