1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்ட நிலையில், அதன்விளைவாக தற்போது ஆட்சிபீடத்தில் இருப்பவர்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தற்போது அவர்களே அச்சட்டத்துக்குப் பதிலீடாக அதனை விடவும் மோசமான ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்துக்கான வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும் என பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன் விசனம் வெளியிட்டுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டல் கூட்டங்கள், எதிர்ப்புப்போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.
அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாக சில சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி தொடர் கவனயீர்ப்புப்போராட்ட பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தன. அப்போராட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு உள்ளிட்ட மலையக சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (13) பி.ப 2.00 – 4.00 மணி வரை நீதியமைச்சுக்கு முன்பாக நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த செயற்பாட்டாளர்கள் ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கு’, ‘பயங்கரவாத, அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்’, ‘பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் வேண்டாம்’, ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிப்போம்’, ‘மக்கள் முன்னுள்ள அரச பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு’, ‘மக்கள் ஆட்சியா? பயங்கரவாத ஆட்சியா?’, ‘மக்கள் குரலுக்கு செவி கொடு’, ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அத்தோடு ‘அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்’, ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தைக் கிழித்தெறிவோம்’, ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவுக்குத் தடைவிதிப்போம்’, ‘நீதிக்காகத் துணையிருப்போம்’, ‘உரிமைகளை வென்றெடுப்போம்’, ‘விடிவுக்காக செயற்படுவோம்’, ‘நமக்காகக் குரல்கொடுப்போம்’ என்றவாறு பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாகப் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர்.
அதன்படி இத்தொடர் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், இதுபற்றி பொதுமக்கள் அவதானம் செலுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், ‘1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை மக்களை வெகுவாகப் பாதித்த பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. அவ்வேளையில் இச்சட்டம் தம்மைப் பாதிக்காது என பெரும்பான்மையின மக்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் காலப்போக்கில், குறிப்பாக ‘அரகலய’ போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் இச்சட்டம் அவர்களுக்கு எதிராகவே பிரயோகிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி 1980 களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் போராடியவர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது. அதன்விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்கள், இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை முன்மொழிந்திருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும்’ எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஏற்கனவே பல தசாப்தகாலமாக கல்வி, சுகாதாரம், இருப்பிடம் என அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்து போராடிவரும் மலையக சமூகம், இவ்வாறான சட்டங்களினால் இன்னமும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவு வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.



