பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு வாபஸ் பெறப்படவேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (27) நீதியமைச்சுக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்டோர், அதனை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோரிடம் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஒன்றையும் நீதியமைச்சின் அதிகாரியிடம் கையளித்தனர்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் பெயரிலான புதிய வரைவை அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது. அச்சட்ட வரைவு பற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பிவைப்பதற்கு பொதுமக்களுக்கு நீதியமைச்சினால் வழங்கப்பட்டிருந்த இரண்டு மாத கால அவகாசம் இன்றுடன் (28) முடிவடைகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் இக்கருத்தறியும் காலப்பகுதி அறிவிக்கப்பட்டது முதல் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டல் கூட்டங்கள், எதிர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாக சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி தொடர் கவனயீர்ப்புப்போராட்ட பிரசாரமொன்றை ஆரம்பித்திருந்தன. பொதுமக்களின் கருத்தறியும் காலப்பகுதி இன்றுடன் (28) நிறைவடையும் நிலையில், அத்தொடர் கவனயீர்ப்புப்போராட்ட பிரசாரத்தின் இறுதிப்போராட்டம் வெள்ளிக்கிழமை (27) மு.ப 11.00 – பி.ப 1.00 மணி வரை நீதியமைச்சுக்கு முன்பாக நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மனித உரிமைகள் ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கப்பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத்தலைவர்கள் உள்ளடங்கலாகப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
அதன்படி போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் ‘பயங்கரவாத மற்றும் அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்’, ‘பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் வேண்டாம்’, ‘புதிய சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தோற்கடிப்போம்’, ‘மக்கள் முன்னுள்ள அரச பயங்கரவாதச் சட்டமூலத்தை மீளப்பெறு’, ‘மக்கள் ஆட்சியா? பயங்கரவாத ஆட்சியா?’, ‘மக்கள் குரலுக்கு செவி கொடு’, ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று’, ‘மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தை எதிர்க்கிறோம்’, ‘1980 களில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்களா?’, ‘பயங்கரவாதத்தடைச்சட்டங்கள் மக்களைப் பாதுகாக்கவில்லை, அரசையே பாதுகாக்கின்றன’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அத்தோடு ‘அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்’, ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தைக் கிழித்தெறிவோம்’, ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவுக்குத் தடைவிதிப்போம்’, ‘நீதிக்காகத் துணையிருப்போம்’, ‘உரிமைகளை வென்றெடுப்போம்’, ‘விடிவுக்காக செயற்படுவோம்’, ‘நமக்காகக் குரல்கொடுப்போம்’ என்றவாறு பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாகப் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவு என்பவற்றுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த அருட்தந்தை சக்திவேல், ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணான வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை எதிர்த்து நாம் இப்போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இன்று (நேற்று) தொடர்ந்து ஐந்து வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதி நாளாக இருப்பினும், இது ஒருபோதும் எமது போராட்டத்தின் முடிவல்ல. இச்சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், நாம் இப்போராட்டத்தை மேலும் பலமாக முன்னெடுப்போம்’ என அரசாங்கத்தை எச்சரித்தார்.
அதேபோன்று அங்கு கருத்து வெளியிட்ட அருட்தந்தை லயனல் பீரிஸ், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு என்பன பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டவேண்டியது அவசியம் என வலியுறுத்தியதுடன், அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு மக்களைத் திரட்டவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
இப்போராட்டத்தின் நிறைவில் பயங்கரவாதத்தடைச்சட்டம் பதிலீடின்றி முற்றாக நீக்கப்படவேண்டும் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்களிடம் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை நீதியமைச்சர் அல்லது நீதியமைச்சின் செயலாளரிடம் கையளிப்பதற்கு இடமளிக்குமாறு நீதியமைச்சுக்கு முன்பாகக் குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரிடம் போராட்டக்காரர்கள் அனுமதி கோரினர்.
இருப்பினும் அதற்கு மறுப்புத் தெரிவித்த பொலிஸார், அம்மகஜரைத் தம்மிடம் கையளிக்குமாறு வலியுறுத்தினர். அதனை நிராகரித்த போராட்டக்காரர்கள், நீதியமைச்சர் இந்நாட்டு மக்களாலேயே தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகவும்




