காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் சர்வதேச கடற்பரப்பில் பயணித்த எம்மை கைதுசெய்து தடுத்துவைத்த இஸ்ரேலிய பாதுகாப்புப்படை, துப்பாக்கியைக் காண்பித்தும், தாக்குதல்களை நடாத்தியும், பாலியல் ரீதியிலான அத்துமீறல்களை நிகழ்த்தியும் எம்மைப் பல்வேறு வழிகளில் துன்புறுத்தி அச்சுறுத்தியது. நாம் அனுபவித்த சித்திரவதைகள் ஒரு சிறு பகுதி மாத்திரமே. ஆனால் எதிர்தாக்குதல் நடாத்தத் திராணியற்ற பலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக நாள்தோறும் இத்தகைய துன்புறுத்தல்களையே அனுபவித்துவருகிறார்கள். இஸ்ரேல் நிகழ்த்திவரும் மீறல்களை உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என ‘குளோபல் சுமுத் புளோட்டிலா’ கப்பல் பேரணியில் இலங்கையிலிருந்து பங்கேற்று, இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் நாடு திரும்பிய செயற்பாட்டாளர் சமீரா மெஹ்புப்தீன் கவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலின் இரண்டு தசாப்தகால முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் காஸாவில் வாழும் சுமார் 20 இலட்சம் மக்களுக்கு அவசியமான மருத்துவப்பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில் துருக்கியிலிருந்து கடந்த 14ஆம் திகதி காஸா நோக்கிப் பயணமான ‘குளோபல் சுமுத் புளோட்டிலா’ என அழைக்கப்படும் கப்பல் பேரணியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச்சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினரால் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு, அங்கிருந்து துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அக்கப்பல் பேரணியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்டு, சில தினங்களுக்கு முன்னர் நாட்டை வந்தடைந்த செயற்பாட்டாளர் சமீரா மெஹ்புப்தீன், ‘குளோபல் சுமுத் புளோட்டிலா’ மீதான இஸ்ரேலியப் படையினரின் ஆக்கிரமிப்பு மற்றும் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த சில தினங்களில் தாம் அனுபவித்த சித்திரவதைகள் குறித்து செவ்வாய்க்கிழமை (26) கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் விபரித்தார். அங்கு அவர் கூறிய விடயங்கள் வருமாறு:
காஸா மக்களுக்கான மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுடன் எமது கப்பல்கள் கடந்த 14ஆம் திகதி துருக்கியிலிருந்து புறப்பட்டன. நாம் சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் கடந்த 17ஆம் திகதி இஸ்ரேலின் போர்க்கப்பலால் மறிக்கப்பட்டோர். மறுநாள் 18ஆம் திகதி எமக்கான தொடர்பாடல் வசதிகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன.
காஸா மக்களுக்கு உதவும் நோக்கில் பயணித்த நாம் இஸ்ரேலிய கடற்பரப்புக்குள் நுழையவில்லை. மாறாக சர்வதேச கடற்பரப்பில் இருந்தபோதே இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினரால் அதன் போர்க்கப்பலுக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அங்கு எம்மனைவரையும் முழங்காலிடச்செய்ததுடன், நாம் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டோம். இஸ்ரேலிய பாதுகாப்புப்படையைச் சேர்ந்தவர்கள் எனது ஹிஜாப்பை அகற்ற முற்பட்டனர். நான் அதற்கு இடமளிக்கவில்லை. பின்னர் நான் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றுமாறு கூறினர்.
என்னுடன் பயணித்த ஏனைய நாடுகளைச்சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலிய படையினரால் மிகமோசமாகத் தாக்கப்பட்டனர். எம்மில் அநேகமானோர் பெரும் காயங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும், எமக்கு எவ்வித மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை. பெண்களின் முகத்திலும், வயிற்றிலும் தாக்கியதுடன் பாலியல் ரீதியிலான தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு அக்கப்பலில் பயணித்த துருக்கி, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச்சேர்ந்த மருத்துவர்களும், உடனடி மருத்துவ உதவியாளரான நானும் எம்மிடமிருந்த பொருட்களைப் பயன்படுத்தி அவசியமான மருத்துவ உதவிகளை வழங்கினோம். எமக்கு உணவோ, குடிநீரோ வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் அங்கிருந்து கட்சியோட் மற்றும் அஷ்கெலோன் சிறைச்சாலைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட நாம், அங்கும் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோர். அச்சிறைச்சாலையில் இருந்த ஒவ்வொரு அறைகளும் மிகச்சிறியதாகவே இருந்தன. அந்த அறைகளில் பெரும் எண்ணிக்கையானோரை அடைத்தவுடன், பலர் சுவாசிப்பதற்குப் பெரிதும் சிரமப்பட்டனர். அங்கு இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிகளையும், நாய்களையும் காண்பித்து எம்மை அச்சுறுத்தினார்கள். அதுமாத்திரமன்றி செயற்பாட்டாளர் ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து, எம்மைக் கொல்லப்போவதாகக் கூறினார்கள்.
அந்த சிறைகளில் பலஸ்தீனர்கள் எவரையும் காணமுடியவில்லை. இருப்பினும் அந்த சிறைகளின் சுவர்களில் அரபு மொழியில் எழுதப்பட்ட வசனங்களையும், சிறுவர்களால் எழுதப்பட்டதைப்போன்ற ஆங்கில அரிச்சுவடியையும், சில ஓவியங்களையும் கண்டோம். இவ்வாறு பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னர் நாம் துருக்கிக்குத் திருப்பியனுப்பப்பட்டோம்.
கடந்த சில நாட்களில் இஸ்ரேலிய படையினரின் தடுப்புக்காவலின்கீழ் நாம் அனுபவித்த துன்புறுத்தல்கள் ஒரு சிறுபகுதி மாத்திரமேயாகும். ஆனால் எதிர்த்தாக்குதல் நடாத்தத் திராணியற்ற பலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக நாள்தோறும் இத்தகைய துன்புறுத்தல்களையே அனுபவித்து வருகிறார்கள். எனது அனுபவத்தில் இஸ்ரேலிய படையினரை மனிதர்களே அல்ல என்றே கூறுவேன். அவர்களிடத்தில் இரக்கமோ, மனிதாபிமானமோ சிறிதும் இல்லை.
இஸ்ரேல் தாம் நினைத்ததைச் செய்கிறது. ஒட்டுமொத்த உலகமும் அதனைப் பார்த்தவாறு அமைதியாக இருக்கிறது. இஸ்ரேலின் கொடுமைகளை எமக்கு அப்பால் சென்று இந்த உலகம் பார்க்கவேண்டும். அதேவேளை எம்மை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர ரீதியிலான தலையீடுகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அதேவேளை சர்வதேச கடற்பரப்பில் பயணித்த எம்மைத் தடுத்துவைத்த இஸ்ரேலின் நடவடிக்கையை அரசாங்கம் கண்டிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்றார்.



