புத்தசாசன அமைச்சே இல்லை என அமைச்சர்களே கூறுகின்றனர் ; 50 இலட்சம் பணம் எனக்கு வழங்கப்படவில்லை!

வெசாக் புனித நிகழ்வுக்கு அரசாங்கம் எந்தவித அனுசரணையையும் வழங்கவில்லை. ஒரு வார்த்தையைக்கூட பேசவில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதுகூட தெரியவில்லை. அமைச்சர்களே புத்தசாசன அமைச்சு இல்லை என்று கூறுகின்றனர். அரசாங்கம் ரூபாய் 50 இலட்சம் வழங்கியதாக சிலர் கூறுகின்றனர். அந்தப் பணம் எனக்கு வழங்கப்படவில்லை என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு நடைபெற்ற விசேட உரையின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் 3 அரச விழாக்கள் உள்ளன. ஒன்று சுதந்திர விழா, மற்றொன்று வெசாக் பெருவிழா, அடுத்தது பொசோன் பெருவிழா. இந்த விழாக்கள் அனைத்துக்கும் அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்கிறது. ஆனால் இந்த நாட்டுக்கு புத்த மதத்தை வழங்கிய மிஹிந்தலையுடன் தொடர்புடைய புனிதத் தலத்துக்கு எந்தவித அக்கறையையும் அரசாங்கம் காட்டவில்லை.

அரசாங்கம் ரூபாய் 50 இலட்சம் வழங்கியதாக சிலர் கூறுகின்றனர். அந்தப் பணம் எனக்கு வழங்கப்படவில்லை. அரசின் விதிமுறைகளின்படி அது பிரதேச செயலாளருக்கே வழங்கப்பட்டது. எனவே இந்த நாட்டின் மக்கள் யாருக்கும் கடன்பட்டவர்கள் அல்ல. மாறாக இந்த நாட்டின் ஆட்சியாளர்களே மிஹிந்து மகா ரஹதனுக்கு கடன்பட்டவர்களாக இருக்கின்றனர்.

இந்த நிகழ்வை புறக்கணிப்பதன் மூலம் மிஹிந்து மகா ரஹதனிடமும், புத்த சாசனத்திடமும் பழிவாங்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

பொசோன் ஏற்பாடுகள் மார்ச் மாதத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டன. எனினும், மிஹிந்தலைக்கு செல்லும் பிரதான வீதிகளின் ஓரங்களில் பல மரங்கள் வெட்டப்பட்டு அவற்றின் கிளைகள் அப்படியே கைவிடப்பட்டுள்ளன. அவற்றை யார் வெட்டினர், எந்த நிறுவனத்தின் அனுமதியுடன் வெட்டப்பட்டன என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. வீதி அபிவிருத்தி அதிகாரசபையா அல்லது வனத்துறையா இதற்கு பொறுப்பானது என்பதும் தெரியாத நிலை காணப்படுகிறது. பக்தர்கள் தங்கும் இடங்கள் மற்றும் தானசாலைகள் அமைக்கப்படும் பகுதிகளின் சுற்றுப்புறம் சீரமைக்கப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது.

அரசாங்கம் வரவில்லை, உதவவில்லை என்றாலும் மக்கள் இந்தப் புண்ணிய நிகழ்வை கைவிடவில்லை. 2,340 ஆண்டுகளுக்கு முன்னர் மிஹிந்து மகா ரஹதன் இந்த நாட்டுக்கு கொண்டு வந்த ஒழுக்கமும் ஆன்மிகப் பாரம்பரியமும் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. எவ்வளவு தடைகள் இருந்தாலும் மக்கள் இங்கு வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் மிஹிந்தலையில் கூடியுள்ளனர்.

இன்று அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி தவணை முறையில் வழங்கப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவு மோசமடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் இங்கு அன்னதானம் வழங்குவதற்காக மக்கள் தங்களுடைய சொந்தப் பணத்தைச் சேமித்து அரிசி மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். தற்போது மிஹிந்தலையில் சுமார் 1 இலட்சம் அரிசி மூட்டைகள் உள்ளன. அவை எந்தத் தவணை முறையிலும் பெறப்பட்டவை அல்ல. மக்கள் தங்கள் உழைப்புப் பணத்தைச் சேமித்து பக்தர்களுக்காக வழங்கியவை.

மிஹிந்தலையுடனேயே தான தர்மம் செய்யும் பண்பாடு உருவாகியது. உலக உணவுத் திட்டம் உலகளாவிய உணவுப் பற்றாக்குறை ஏற்படப்போகிறது என்று எச்சரித்துள்ளது. அந்த அறிக்கையில் ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் சோமாலியா ஆகிய 3 நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் தான தர்மங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மிஹிந்து மகா ரஹதன் தேவாநம்பிய திஸ்ஸ மன்னனிடம் மனிதர்களை மட்டும் அல்லாமல் இருகால் உயிரினங்கள், நான்குகால் உயிரினங்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், மரங்கள், செடிகள் என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று போதித்தார். ஆட்சியாளர்கள் உரிமையாளர்கள் அல்ல் பாதுகாவலர்கள் என்பதையே அவர் எடுத்துரைத்தார். ஆனால் இன்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

எங்களுக்கு அரசாங்கத்தின் பணம் தேவையில்லை. ஆனால் இந்தப் புனித நிகழ்வுக்கு அரசாங்கம் எந்தவித அனுசரணையையும் வழங்கவில்லை. ஒரு வார்த்தையைக்கூட பேசவில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதுகூட தெரியவில்லை. அமைச்சர்களே புத்தசாசன அமைச்சு இல்லை என்று கூறுகின்றனர். அதனால்தான் இந்தப் புனித நிகழ்வுக்கு அனுசரணை கிடைக்கவில்லையோ என்று கேட்க வேண்டியுள்ளது.

2,340 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு கிடைத்த ஆன்மிக ஒளி மீண்டும் பிறக்க வேண்டும். 12,000 மகா ரஹதர்கள் வாழ்ந்த இந்த புனித பூமியில் மிஹிந்து மகா ரஹதனின் புனித தாதுக்களும், 360 தாதுகோபுரங்களும், அஷ்டபல போதிகளும் உள்ளன. அந்தப் புனித சக்தியின் ஆசீர்வாதத்தால் நமது நாடு உடல் மற்றும் மனத் தளர்ச்சியிலிருந்தும், வறுமையிலிருந்தும் மீண்டு வளமான நாடாக மாற வேண்டும்.

நாங்கள் எந்தக் கடனுமின்றி இந்தப் புண்ணிய நிகழ்வை நடத்தி முடித்துள்ளோம். நாட்டின் மக்கள் பக்தியுடன் வந்து வழிபட்டுள்ளனர். மிஹிந்து மகா ரஹதனின் ஆசீர்வாதம் இந்த நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றார்.