வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சில பொருட்களை மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பேலியகொடை மீன் சந்தைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குப் பின்னால் உள்ள பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே என்பவரை விசாரணைக்குட்படுத்திய பின்னர், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலக்கமைய இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த பகுதியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கிகள், 3 ரி-56 ரக வெடிமருந்துகள், 52 ரி-56ரக உயிருள்ள வெடிமருந்துகள், சுயமாக இயக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் இராணுவ சீருடைகள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.





