பொது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள விவகாரம் ; குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதிரடி விசாரணை!

பொது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் வெளி தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த உத்தியோகப்பூர்வ வலைத்தளமானது பல முறை வெளி தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிக்கலை சரிசெய்ய இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SL CERT) மற்றும் இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA)  நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், வலைத்தளத்திலுள்ள சின்னத்தில் சில தெளிவின்மை காணப்பட்டதுடன், பொது பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சின் செயலாளர் கடந்த 09 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடளித்துள்ளார்.

அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும், பொது பாதுகாப்பு அமைச்சக மட்டத்திலும் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.