மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட சைபர் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேரர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றை செவ்வாய்க்கிழமை (13) பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தேரர்கள், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைந்து பௌத்த மதகுருமார்களைக் குறிவைத்து இவ்வாறான அவதூறுப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகக் குற்றம் சாட்டினர்.

குறிப்பாக, அண்மையில் அரசியல்வாதி ஒருவரால் மிஹிந்தலை தேரரைப் பற்றிக் கூறப்பட்ட ‘வனச்சாரி’ போன்ற தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்கள், தனிப்பட்ட ஒரு மதகுருவை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த மகா சங்கத்தினரையும் அவமதிக்கும் செயலாகவே கருதப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டின் கலாசாரம் மற்றும் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதில் முன்னின்று உழைக்கும் தேரர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் தொடுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகப் பல்வேறு யூடியூப் அலைவரிசைகளைப் பயன்படுத்தி மதகுருமார்களைப் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகக் கவலை வெளியிட்ட அவர்கள், இக்கட்டான சூழல்களில் தேரர்கள் மௌனம் காக்கப் போவதில்லை எனத் தெரிவித்தனர். நாட்டின் ஆட்சியாளர் என்பவர் மக்கள் மற்றும் மதத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டுமே தவிர, இவ்வாறான அவமதிப்புகளைக் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தப் பிரச்சனை குறித்து நாட்டின் மகாநாயக்க தேரர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த முறைப்பாட்டின் மீது பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுத்து உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர்கள் அக்கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.





