மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் “ஐஸ்” (ஜஸ்) போதைப்பொருளுடன், பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை, நேற்று வியாழக்கிழமை (09) இரவு பொலிசார் முற்றுகையிட்டனர். இந்த நடவடிக்கை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரிடமிருந்து 5840 மில்லிகிராம் “ஐஸ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
மேலதிக சோதனையில், வீட்டிலிருந்து மேலும் 1000 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரியும் ஒருவரும், குறித்த வியாபாரியும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


